சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ .ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் திருவான்மியூரிலும், டிஜிபி சங்கர் ஜிவால், அவரது மனைவி மம்தா சர்மாவுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரிலும் வாக்களித்தனர். 
தமிழகம்

சில வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்: காத்திருந்து வாக்களித்த பிரபலங்கள் @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனர்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் நேற்று வாக்குப்பதிவின்போது 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,842 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் பெரும்பாலான இடங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதால், வாக்குப்பதிவு தொடங்குவது தாமதமானது.

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகரில் 102-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு, காலை 8 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

அதிமுக கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன் தேர்தல் நடத்தும்அதிகாரியிடம் ஒரு மணி நேரம்வாக்கு பதிவு நேரத்தை நீட்டிக்கவேண்டும் என கூறியதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆட்சியர் ரஷ்மி
சித்தார்த் ஜகடே கோயம்பேடு பகுதியில் வாக்களித்தார்

இதேபோல், கொருக்குபேட்டை கே.சி.எஸ். கல்லூரியில் 180-வதுவாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக அங்கும் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை சாலிகிராமத்தில் காவேரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 107-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.இதனால், வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்த முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களுடன் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்களிக்க காத்திருந்தார். பின்னர், ஒரு மணி நேரத்துக்கு பிறகு இயந்திர பழுது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், சாலிகிராமத்தில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, அங்கும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமானது. வடபழனியில் 130-வது வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க முடியாத நிலையில், மாற்று இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் அங்கும் ஒரு மணி நேரம் கழித்தே வாக்குப்பதிவு தொடங்கியது.

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட லயோலா கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் வாக்காளர்கள் 2 மணி நேரம் தாமதமாக தங்களது வாக்கை பதிவு செய்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மனைவி, மகளுடன் மயிலாப்பூரில் வாக்களித்தார்

இயந்திரங்கள் பழுதால், நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 20 நிமிடமும், சூளைமேடு சங்கராபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 40 நிமிடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட்பால் பள்ளியில் 30 நிமிடமும், தேனாம்பேட்டையில் உள்ள வன்னிய தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் 30 நிமிடமும், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் தலா 15 நிமிடமும் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

மேலும் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி தனது குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியிலும் இயந்திரங்கள் பழுதால் 45 நிமிடத்துக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

SCROLL FOR NEXT