சென்னை: லண்டனில் இருந்து வாக்கு செலுத்த வந்த சென்னையை சேர்ந்த நபர் ஒருவர், வாக்கு செலுத்த முடியாததால் அதிர்ச்சியடைந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ‘சர்கார்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் வாக்கு செலுத்துவதற்காக பல லட்சம் செலவு செய்து அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு வந்து ஏமாற்றம் அடைவது போன்ற சம்பவம் ஒன்று நேற்று சென்னை சூளைமேட்டில் நிகழ்ந்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (67). இவர் லண்டன் நகரில் பணியாற்றி வருகிறார். இவர் 2024 மக்களவை தேர்தலையொட்டி தனது வாக்கை பதிவு செய்வதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்துள்ளார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5லட்சம் செலவு செய்து சென்னை வந்தேன். ஆனால், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.