தமிழகம்

அதிகாரிகள் அளித்த ‘உறுதி’யால் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்ட தருமபுரி கிராம மக்கள்!

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோரிக்கையை முன்வைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாலக்கோடு ஒன்றியம் பூச்செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதி அள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊரிலிருந்து பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போது, சேலம் - பெங்களூரு ரயில் பாதையை கடந்து செல்லும் நிலை உள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் ரயில் பாதையை ஆபத்தான நிலையில் கடப்பதால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிராமங்களுக்கு வர வேண்டுமெனில் 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிவர வேண்டிய நிலை இருப்பதால் உரிய நேரத்தில் அந்த சேவைகள் கிடைப்பதில்லை என்றும் கூறி தங்கள் பகுதிக்கு ரயில்வே பாலம் அமைத்து தரும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்கப் போவதில்லை என அறிவித்து கடந்த ஜனவரி மாதம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, கிராம முகப்பில் பேனர் அமைத்தனர்.

சுமார் 2000 வாக்காளர்கள் உள்ள இந்த கிராமத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சமாதானம் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஏற்படவில்லை. இருப்பினும் இன்று காலை முதல் மீண்டும் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி வாக்களிக்க செய்யும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டனர்.

ரயில்வே துறையுடன் பேசி பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதன் பலனாக காலை 11.30 மணிக்கு பிறகு ஜோதி அள்ளி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர். காலை 7 மணி முதல் 11.30 வரை 4.30 மணி நேரத்திற்கு பிறகு இப்பகுதியில் வாக்கு பதிவு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT