சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகவே தொடங்கியது.
சென்னை சாலிகிராமத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பூத் நம்பர் 107ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை வாக்களிக்க வரும்போது கோளாறு ஏற்பட்டது. அதன்பின் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
அதே சாலிகிராமத்தின் பத்மா சாரங்கபாணி பள்ளி வாக்குச்சாவடியில் இரண்டு மணிநேரம் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு ஐந்து பூத்துகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அனைத்திலும் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 8.45 மணிக்கே தொடங்கியது. மேலும் இங்கு வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் புகார் எழுந்தது.
இதேபோல், சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 159வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இங்கும் இயந்திர கோளாறு காரணமாகவே தடை ஏற்பட்டது.
ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க இருந்தனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர்.
இதேபோல், அரியலூர் கீழையூர் வாக்குச்சாவடியில் இரண்டு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனர்.
திருப்பூர் வாக்குச்சாவடி மையம் 222ல் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை உசிலம்பட்டியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருந்தனர்.
இதேபோல், நெல்லை தச்சலூர், புதுகோட்டை, திருச்சி மேற்கு வாக்குச்சாவடிகளிலும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு சில மணிநேரங்கள் தடைபட்டது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
கோடை வெயில் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளதால், வெயிலுக்கு முன்னதாக வாக்களிக்க தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் காலை முதலே வாக்களிக்க குவிந்தனர். ஆனால், சில இடங்களில் வாக்குப்பதிவு தடைபட்டது மக்களை அவதிக்குள்ளாக்கியது.