புதுச்சேரி: இந்தியாவுக்கு 18 வது மக்களவைத் தேர்தல் எப்ரல் 19ம் தேதி ( இன்று ) முதல் கட்டமாக நடக்கும் நிலையில் புதுச்சேரிக்கோ 15வது மக்களவைத் தேர்தல் நடக்கிறது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களும், ஆந்திரத்தை ஒட்டி ஏனாமும், கேரளத்தையொட்டி மாஹேயும் அமைந்துள்ளன. தமிழகம், ஆந்திரம், கேரளம் அருகே இருந்தாலும் புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களின் கலாச்சாரம், பண்பாடு தொடங்கி அரசியல் வரை பல விஷயங்களில் கணிசமான வேறுபாடு உண்டு. பழங்கால அரசர்கள் ஆண்டதற்கான சுவடுகள் மிகவும் புதுச்சேரியில் குறைவு. பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தற்போதும் பிரெஞ்சு தொடர்புகளே அதிகம்.
இன்றைக்கு இந்தியாவின் ஒன்றியப் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்ததே 1954-ல் தான். புதுச்சேரியில் இதுவரை 14 மக்களவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஏனெனில் புதுச்சேரி இந்தியாவில் சேர்ந்தது கடந்த 1963-ம் ஆண்டு தான். தமிழகத்தில் 4-வது மக்களவைத் தேர்தல் நடந்தபோதுதான் புதுச்சேரியில் முதல் தேர்தலே நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் இன்று முதல் கட்டமாக தொடங்குகிறது. அதே நேரத்தில் புதுச்சேரியில் நடப்பதோ 15வது மக்களவைத் தேர்தல்தான். அதில் 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தலா ஒரு முறை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக வென்றுள்ளன. காங்கிரஸில் போட்டியிட்ட சண்முகமும், பாரூக்கும் தலா 3 முறை எம்பிக்களாக இருந்துள்ளனர். கடந்த 2019ல் நடந்தது 14வது தேர்தல்.காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கமும் என்.ஆர்.காங் சார்பில் டாக்டர் நாராயணசாமியும் போட்டியிட்டதில் ஒரு லட்சத்து 97ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி தற்போது எம்பியாக உள்ளார்.
தற்போது நடக்கும் 15வது மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வரும் ஜூன் 4ல் புதுச்சேரியின் 15வது எம்.பி. யார் என்பது தெரியவரும்.