சென்னை: தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியான அருண், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார். எனவே அவரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மேலும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டக்கல்லூரி செயல்பட்டபோது 2008-ம் ஆண்டு நவ.12-ம் தேதி, மாணவர்களுக்கு இடையே சாதிரீதியாக பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி, உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.
அப்போது சிபிசிஐடி எஸ்பியாக பதவி வகித்த தற்போதைய சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துகைது செய்தார். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் விதமாக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியான அருணை தேர்தல் முடியும்வரை முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை டிஜிபி மறுத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தார். மேலும், தேர்தல்ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி இருப்பதால் மனுதாரர் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்றார்.
அதையேற்ற நீதிபதிகள், நாளை(இன்று) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவல் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றகோரிக்கையை ஏற்க இயலாது.இப்போது தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட முடியாது. மனுதாரர் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும்.
அதேநேரம், தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல்ஆணையத்தின் கடமை. சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருப்ப தாக கூறப்பட்டுள்ளது. எனவே தவறு செய்யும் அதிகாரிகளை கண்காணித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும், எனக் கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.