சென்னை: மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், உடலியக்கம் பாதிக்கப்பட்டவர்கள் ‘சக்சம்’ கைபேசி செயலி அல்லது ‘1950’ உதவி எண்ணில் பதிவு செய்தால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வீடு மற்றும் வாக்குச்சாவடி இடையில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 39 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும், 177 கூடுதல் வாக்குச்சாவடிகள் உட்பட 68,321 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 6.23 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணிக்காக 3.32 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான 3 கட்டபயிற்சிகள் வழங்கப்பட்டு, வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தொகுதிக்கு ஒருவர் என 39 பொது பார்வையாளர்கள், 20 காவல்துறை பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதுதவிர, மாநிலத்துக்கு சிறப்புசெலவின பார்வையாளர் ஒருவரும்தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி, பார்வையாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி துணை ராணுவப்படை யினரை தேவையான இடத்தில் பணியமர்த்தியுள்ளோம்.
தேர்தல் முடிந்த பிறகு இவர்களில் 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்திலேயே பணியில் இருப்பர். அவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் ‘ஸ்ட்ராங்’ ரூம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள், வருமான வரித்துறை சோதனையில், நேற்று முன்தினம் வரை, ரூ.173.85 கோடி ரொக்கம், ரூ.6.67 கோடி மதிப்பு மதுபானங்கள், ரூ.1.13 கோடி மதிப்பு போதை பொருட்கள், ரூ.1093 கோடி மதிப்பு தங்கம் (இதில் ரூ.950 கோடி மதிப்பு தங்கம் திருப்பியளிக்கப்பட்டுள்ளது) ரூ.35.78 கோடி மதிப்பு பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக சி விஜில் செயலி மூலம் 4,61புகார்கள் பெறப்பட்டு, அதில் 3,855புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள் ளது. 22 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை சரியாக இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டன. வாக்காளர் அட்டையை பொறுத்தவரை, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் முதல்,கடந்த மார்ச் 27 வரை விண்ணப்பித்திருந்த 26,50,943 பேருக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி தங்கள் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்கலாம். மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள, பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளில் பொது போக்குவரத்தை பயன்படுத்த, இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொது போக்குவரத்து வசதி இல்லையென்றால், அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யலாம் என்றும், தகுதியான வாக்காளர்கள் இந்த வசதியை பெற சக்சம் செயலிஅல்லது 1950 உதவி எண்ணில் பதிவு செய்யும் வசதி வழங்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு நாளில், சாதாரண நகர பேருந்துசேவையில் இலவச பயணச்சீட்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கும், அங்கிருந்து இல்லத்துக்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தபால் வாக்கு வசதியை பொறுத்தவரை, 85 வயதுக்கு மேற்பட்ட 67,165 பேர், மாற்றுத் திறனாளிகள் 4,639 பேர் உட்பட 1,08,804 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் சவால் என்று எதுவும் இல்லை. தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன. காவல்துறை பாதுகாப்பு உள்ளது.
இதுதவிர, தேர்தல் பணியாளர் கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.