கும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக திமுக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் செக்கடித் தெருவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக, கும்பகோணம் மேற்கு போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று, வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்த, 25-வது வார்டு திமுக துணைச் செயலாளர் ரா.சிவக்குமார்(45), வார்டு பிரதிநிதி க.பார்த்திபன்(50), 24-வது வார்டு துணைச் செயலாளர் ரா.கார்த்திகேயன்(42) ஆகியோரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து ரூ.16,200 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ், ராம.ராமநாதன் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு மேற்கு காவல் நிலையம் முன்பு திரண்டு, பிடிபட்ட 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகேயுள்ளவீரமாங்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று தகவல் வந்தது.
அதன்பேரில், தேர்தல் பறக்கும்படையினர் அங்கு சென்று, அதே பகுதியைச் சேர்ந்த திமுகபிரமுகர் லோகநாதனிடமிருந்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.7,400-ஐ பறிமுதல் செய்து, அவரை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், போலீஸார் அவரைக் கைது செய்தனர்.