தமிழகம்

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்குப் பிறகு நடத்தை விதிகளை தளர்த்த காங். கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளி இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம், காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி.செல்வம் தலைமையில், செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சூரிய பிரகாசம், சட்டத்துறை துணைத்தலைவர் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்டோர் நேற்று தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவைச் சந்தித்து மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் செல்வம் கூறியதாவது:

தமிழகத்தில், ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்குப் பிறகும் ஜூன் 4-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளோம். சாமானிய மக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

மக்களைப் பாதிக்கும் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதால், இதை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தலைமை தேர்தல் அதிகாரியும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்” என்றார்.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் கூறும்போது, “தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற 45 நாள் அவகாசம் உள்ளது. இந்த நாட்களில் அரசு இயந்திரம் முற்றிலும் முடக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இயங்க முடிவதில்லை.

இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே, நடத்தை விதிமுறைகளை 20-ம் தேதி முதலே நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT