சென்னை: 'தமிழக வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கியுள்ள திமுக, வாக்களித்தபின் பணம் தரப்படும் என உறுதி அளித்துள்ளது' என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் திமுக தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் சூழலில், வழக்கமாக திமுக வாக்குக்கு பணம் கொடுத்துவந்தது.
உரிய நடவடிக்கை வேண்டும்: இந்த தேர்தலில் பணம் கொடுப்பதற்கு பதில், திமுக தலைவரின் படம் பதித்த டோக்கன்களை தமிழகம் முழுவதும் வழங்கியுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும். இது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் திமுக இது போன்ற பணியை மேற்கொண்டு வருகிறது.
வாக்களித்த பின், அந்த டோக்கனைக் கொண்டுசென்று திமுக நிர்வாகிகளிடம் கொடுக்கும்போது அதற்கு பணம் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். கொடுக்கப்பட்ட டோக்கன் மாதிரியை இணைத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவாக தந்துள்ளோம்.
வாக்குக்கு பணம் தருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற டோக்கன் வழங்கும் நிர்வாகிகளை கைது செய்து அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.