நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர், மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நாளில் பணம், மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீஸார் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கடற்கரை கிராமங்களில் படகுகள் மற்றும் தொழிற்கூடங்களில் மெரைன் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மதுக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், கட்சியினர் பலர் மதுபாட்டில்களை ஆயிரக்கணக்கில் பதுக்கி வருகின்றனர்.
இது குறித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தேங்காய்பட்டினம் அருகே முள்ளூர் துறை கடற்கரை கிராமத்தில் சோதனை நடத்தினர். இதில், ஒரு ஐஸ்கட்டி ஆலையில் இருந்து 3,449 மது பாட்டில்களை புதுக்கடை இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என போலீஸார் கூறினர். இது தொடர்பாக, முள்ளூர் துறை அரையன் தோப்பைச் சேர்ந்த ஆன்றனி ஹென்ஸ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.