கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்குத் தேர்தல் இடம் பெறும் ரயில் பாதை திட்டம், 82 ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதி இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 1905-ம் ஆண்டு முதல் 1936 வரை ஆங்கிலேயர் ஆட்சியில் திருப்பத்தூர் முதல் பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில் போக்குவரத்து சேவை இருந்தது. போதிய வருமானம் இல்லாமல் 1942-ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில் பாதை இருந்த இடம் தெரியாமல் போனது.
1952-ம் ஆண்டு முதல்: கடந்த 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வாக்குறுதியிலும் தவறாமல் இந்த ரயில் பாதை திட்டம் இடம் பெற்று வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இத்தொகுதி மக்களின் 82 ஆண்டுக்கால கோரிக்கையான ஜோலார் பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை திட்டம் நிறைவேறாததால், மாவட்ட தலைநகரமாக உயர்ந்துள்ள கிருஷ்ணகிரியின் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்து வருவதாக வணிகர்கள், தொழில்முனைவோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிதி ஒதுக்கீடு வேண்டும்: இந்நிலையில், தற்போதைய தேர்தலில் வழக்கம்போல அனைத்து வேட்பாளர்களின் வாக்குறுதியிலும் ரயில் பாதை திட்டம் இடம்பெற்று, வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பேருந்து, ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சந்திரசேகரன் கூறியதாவது: கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் தொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. ஆனால், கடைசியாக நடந்த ஆய்வில் திட்ட வரைவுப் பணிகள் நிறைவு பெற்று, நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஓசூரில் விமான நிலையம்: எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் வெற்றி பெற்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தங்களது முதல் பணியாக கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதேபோல, ஓசூர் விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால், மாவட்டத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.