அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் கிடைத்தது எப்படி என்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி(80). விவசாயி. சுமார் 25 ஏக்கரில் முந்திரி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்.
பேத்தி திருமணத்துக்கு... இந்நிலையில், அவரது வீட்டில் அதிக அளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, ரூ.20 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்தை தனது பேத்தியின் திருமணச் செலவுக்காக வைத்திருப்பதாக அடைக்கலசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, வருமான வரித் துறையினருக்கு, தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வருமான வரித் துறையினர் அடைக்கலசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். தேவைப்படும் நேரத்தில் நேரில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்த வருமான வரித் துறையினர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.