கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரியும் என, கமல்ஹாசன் பேசினார்.
கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, சூலூர், காளப்பட்டி, ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கவுன்சிலராகவும், மேயராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியாவில் 97 கோடி பேர் வாக்குப் பதிவு செய்ய உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக தமிழர்கள் திகழ வேண்டும். சிறு பிழை செய்தால் கூட அதை சரிசெய்ய நூற்றாண்டு காலம் கூட ஆகலாம். தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் இரண்டாவது சுதந்திர போர். ஜூன் 4-ம் தேதி மக்கள் கொண்டாடும் நாளாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். செங்கோல் என்பது உங்கள் விரல் தான்.
காந்தி, காமராஜர், கலைஞர் வரை பல தலைவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் தரவுகளில் உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகையில் 43 சதவீத பெண்கள் பணிக்கு செல்கின்றனர். இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்ட முயற்சிகளே காரணம். வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர் களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.
நாம் உட்கொள்ளும் பிஸ்கெட் உணவு பொருளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், தங்க பிஸ்கெட்டுக்கு வெறும் 3 சதவீதம் வரியும் விதிக்கப் படுகிறது. பாஜக கோவை தொகுதியில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விமான நிலையம் மேம்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. நாளை நமதாக வேண்டும் என்றால் இன்று நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமே. இவ்வாறு அவர் பேசினார்.