தேனி: ஓட்டுக்காக பணம் தர மாட்டேன், என அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தேனி அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன், தேனி அன்னஞ்சி விலக்கில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம் இடம் தான் வரும். திமுகவும், அதிமுகவும் பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற நினைக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் செலவுகள் குறையும். இயற்கைக்கும், விவசாயத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும்.
ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் மும்முரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் எனக்கு வாக்கு கேட்டு இங்கு பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் பணத்தை சுரண்டித்தான் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இப்படி ஓட்டு வாங்குவதில் எனக்கு உடன் பாடு கிடையாது. ஓட்டுக்காக நான் பணம் தரமாட்டேன். திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டது. இதனால் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.