பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 
தமிழகம்

‘திமுக வேட்பாளர்கள், தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு’ - தேர்தல் ஆணையத்திடம் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: ‘2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திமுக வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், “2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் முன்னணி தலைவர்கள், அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகிறது என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

தொலைபேசி வழியாக ஒட்டுக்கேட்பதை, சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் கூறியிருக்கிறது. மேலும், தொலைபேசி வழியே ஒட்டுக்கேட்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஒவ்வொரு குடிமக்களின் தனி உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையை எந்தவொரு அரசும் பின்பற்ற வேண்டும். திமுக வேட்பாளர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது சட்டவிரோதமானது. எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT