தமிழகம்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தை பொருத்தவரை 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவை தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இதனிடையே, வாக்குப்பதிவை ஒட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து வசதிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. தற்போது வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, 18 மற்றும் 20ம் தேதிகளில் சென்னை தாம்பரம் - கன்னியாகுமரிக்கும், சென்னையின் எழும்பூர் - கோவைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களிலும் தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது.

அதேபோல், சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில் 18 மற்றும் 20ம் தேதி ஆகிய இரு தினங்களில் மாலை 4.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் செல்கிறது.

SCROLL FOR NEXT