கோப்புப் படம் 
தமிழகம்

விதிமீறலில் ஈடுபட்ட 50 வாகன புகை பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் சிலவற்றில், சமீபகாலமாக வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டன. இதையடுத்து, கடந்த 13-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள வாகன புகை பரிசோதனை மையங்களில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 50 புகை பரிசோதனை மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் வேறு நபர் பணியிலிருந்தது, உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியது, கேமரா பொருத்தப்படாதது, கட்டண விகித விவரம் அடங்கிய அட்டவணையை வைக்காமல் இருந்தது, உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது, அளவுத் திருத்தம் சான்றிதழ் இல்லாமல் இருந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்த வாகன புகை பரிசோதனை மையங்களில் செயல்பாட்டை மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய தொலைபேசியை கட்டாயமாக்குவதுடன், இனிமேல் வாகன புகை சோதனை செய்வது குறித்த வீடியோவையும், வாகனங்கள் அந்த சோதனை மையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு கொண்ட புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT