சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையடுத்து, காசிமேட்டில் 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக, 61நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கியது.
வரும் ஜுன் 14-ம் தேதி வரை இந்த தடைக் காலம் அமலில் இருக்கும். மீன்பிடித் தடைக் காலம் தொடங்கியதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. மேலும், இந்த தடைக்காலத்தில் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபடுவர்.
மேலும், இந்த தடைக்காலத்தில் சிறிய பைபர் படகுகள் மூலம் அண்மைக் கடல் பகுதியில் மீன்பிடிப்பர். இதனால், மீன்களின் வரத்துக் குறைவாக இருக்கும். அத்துடன், மீன்களின் விலையும் அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.