தமிழகம்

சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதம்

செய்திப்பிரிவு

சென்னை: பால் கொள்முதல் குறைவால், வடசென்னை, மத்திய சென்னையின் பல்வேறு இடங்களில் ஆவின்பால் விநியோகம் நேற்று பல மணிநேரம் தாமதமானது. இதனால், பால் முகவர்கள், பொதுமக்கள் சரியான நேரத்தில் ஆவின் பால் கிடைக்காமல் தவித்தனர்.

சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக 14.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பண்ணைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து பால் வரத்து குறைந்து, பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை 2.30மணிக்கு முகவர்களுக்கு கிடைக்க வேண்டிய பால் காலை 7 மணிக்கே கிடைத்தது.

பொதுமக்கள் தவிப்பு: இதன் விளைவாக, வியாசர்பாடி, அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மாதவரம், பெரம்பூர், ஓட்டேரி, பட்டாளம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், அரும்பாக்கம், புரசைவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் பால் விநியோகம் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால், பால் முகவர்கள், பொதுமக்கள் ஆவின் பால் கிடைக்காமல் தவித்தனர்.

வடசென்னை, மத்திய சென்னையில் 1.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதாக பால் முகவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக பால்முகவர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் கொள்முதல் சரிவடைந்துள்ளது. அந்த வகையில், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பண்ணைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து பால் வரத்து குறைந்து,பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக, பால் பண்ணைகளிலிருந்து முகவர்களுக்கு பால் விநியோகிக்கும் 25-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளில் நெடுநேரம் நின்றது. பால் விநியோகம் தாமதத்தால், வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சுமார் 1.5 லட்சம் லிட்டர் வரை ஆவின் பால்விநியோகம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, ``அம்பத்தூர், மாதவரம் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து சில வாகனங்கள் புறப்படுவது தாமதமாகின. மற்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றுவிட்டன. பொதுவாக, பால் கொள்முதல் குறைந்துள்ளது. இருப்பினும், சென்னைக்கு வரும் கொள்முதல் பால் குறையவில்லை. இங்கு பால் கொள்முதல் நிலையாக இருக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல விநியோகிக்கப்படும்'' என்றுதெரிவித்தனர்.

SCROLL FOR NEXT