தமிழகம்

பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக வழக்கறிஞர் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக திமுகவினர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அதிமுக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆர்.மதுரை வீரன் வழங்கியுள்ள புகார் மனுவில், கூறப்பட்டிருப்பதாவது: மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் பூத் சிலிப் மற்றும் அதனுடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட 45-வது வார்டில் ஏப்.14-ம் தேதி மாலை முதல் திமுகவினர் பூத் சிலிப்பும் பணமும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் நேரடியாக வந்து சம்பந்தப்பட்ட திமுகவினரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், தற்போது வரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று அனைத்து மக்களவை தொகுதிகளிலும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். எனவே,முறைகேடு செய்யும் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணபலத்தை கட்டுப்படுத்தி தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.'' இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT