அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். உடன் தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

அம்பேத்கரின் 134-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 134-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அம்பேத்கர் உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு
மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை.

பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவ சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணை கொள்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் சுப்பிரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

அதிமுக சார்பில் சென்னை, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் படத்துக்கு கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார். திருநாவுக்கரசர் எம்.பி., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி
நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பெரியமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், டி.பி.சத்திரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சமத்துவமிக்க சமுதாயத்தை நிலைநாட்ட தன் வாழ்நாளை அர்ப்பணித்த அம்பேத்கரை போற்றி மகிழ்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி தொடங்கும் பூங்கா அருகே அமைந்துள்ள
அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சேலத்திலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சத்தியமங்கலத்திலும், தி.க. தலைவர் கி.வீரமணி திருச்சியிலும், விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலிலும் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT