நாமக்கல்: சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மோகனூர் அருகே வளையப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடந்தது. இதில், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள விளை நிலங்களைக் கையகப் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், சிப்காட் அமைப்பதால், அப்பகுதி விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு மக்கள் பாதிக்கப் படுவதாகக் கூறி, சிப்காட் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனிடையே, வளையப் பட்டியில் நேற்று முன்தினம் இரவு சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்ர மணியம் தலைமை வகித்து, கோரிக்கை குறித்துப் பேசினார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.
தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “வரும் 19-ம் தேதி நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் பகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் புறக்கணிப்பது’ எனத் தீர்மானம் நிறைவேற்றினர். போராட்டம் நேற்று காலை நிறைவடைந்தது. இதில், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.