சென்னை: புத்தாண்டையொட்டி, சென்னையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.‘குரோதி’ தமிழ் புத்தாண்டு நேற்று பிறந்தது.
இதையொட்டி, அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜை நடந்தது. 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலையில் தங்க நாணயக் கவசம், தங்கவேலுடன் மூலவர் முருகப்பெருமான் அருள்பாலித்தார். உச்சிகால பூஜை முடிந்ததும் மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை அபிஷேகம் முடிந்ததும் புஷ்ப அங்கி சாத்தப்பட்டது. காலை முதல் இரவு 10 மணி வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் நேற்று காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறக்கப்பட்டது.
அஷ்டலட்சுமி சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ‘குரோதி’வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதேபோல, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், தியாகராய நகர் வெங்டேஸ்வர பெருமாள், பத்மாவதி தாயார், மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பாரிமுனை கற்பகாம்பாள், திருநீர்மலை ரங்கநாதர், குன்றத்தூர் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தேர்பவனியும் நடைபெற்றது. பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பந்தல் அமைத்து, பானகம், நீர்மோர் ஆகியவையும் வழங்கப்பட்டன. வீடுகளிலும் மக்கள் இறைவனுக்கு படையல் வைத்து வணங்கினர்.
பல வீடுகளில் சித்திரை கனி காணும் நிகழ்வு நடந்தது. பூஜை அறையில் சுவாமிக்கு முன்பு கண்ணாடி, பல்வேறு விதமான பழங்கள், ஆபரணங்களை வைத்து வழிபாடு நடத்தினர். பெரியவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.