மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ‘ரோடு ஷோ’வால் மதுரையில் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் பாஜக வேட்பாளராக ராம.சீனிவாசன் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஏப். 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி சென்னை, கோவை, திருப்பூர், நெல்லையில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் ‘ரோடு ஷோ’ நடத்தி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். நேதாஜி ரோடு முருகன் கோயில் முன் தொடங்கிய ரோடு ஷோ நகைக்கடை பஜார் வழியாக விளக்குத்தூண் சந்திப்பு வரை நடைபெற்றது.
இப்பகுதியில் வட மாநிலத்தவர்களின் கடைகள், வீடுகள் அதிக அளவில் உள்ளன. இவர்கள் கடைகளை அடைத்து விட்டு அமித்ஷாவை பார்க்க குடும்பத்துடன் காத்திருந்தனர். மதுரையின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது தவிர பாஜக நிர்வாகிகளும் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சியினரை ரோடு ஷோவுக்கு அழைத்து வந்திருந்தனர்.
இதனால் அமித்ஷா ‘ரோடு ஷோ’வில் கூட்டம் அதிகமாக இருந்தது. திறந்த வேனில் அமித்ஷா தாமரை சின்னத்துடன் கையை அசைத்தபடி வந்ததைப் பார்த்து மக்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். விளக்குத்தூண் பகுதியில் ‘ரோடு ஷோ’ முடிந்ததும் அமித்ஷா உரையாற்றினார். அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பின்பு பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பாஜக மேலிடத் தலைவர்கள் பலர் தமிழகம் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் பேசும்போது திமுக, காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சனம் செய்து வந்துள்ளனர். கூட்டணியில் இல்லாவிட்டாலும் அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவருக்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் அமித்ஷா பேசும்போது, அதிமுகவையும் விமர்சனம் செய்தார்.
அதிமுகவும், திமுகவும் ஊழல் செய்ததால் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை என்றார். இரு கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்கும் நேரம் வந்திருப்பதாகவும், இதனால் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் பேசியதும் கட்சியினர் ஆரவாரம் செய்தனர். அமித்ஷாவின் வருகை மதுரை பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அமித்ஷாவை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மதுரை வர உள்ளனர். இதையடுத்து பாஜக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.