சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் கையெழுத்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை பொதுமக்களுக்கு பாஜக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக பாஜக மாநில தலைமை சார்பில், தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாழ்த்து அட்டையில் ‘உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்’ என்ற வாசகம் மோடியின் உருவப்படத்துடன் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழ் அவரது கையெழுத்து இந்தி மொழியில் இடம் பெற்றுள் ளது.
இந்த வாழ்த்து அட்டைகளை பொதுமக்களிடம் பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அந்தந்த மாவட் டங்களில் பாஜக நிர்வாகிகளும் தனியாக வாழ்த்து அட்டைகளை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் வைக்கப்பட்டிருந்த 17 பெட்டிகளை போலீஸார் எழும்பூரில் நேற்று முன்தினம்பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.