புதுச்சேரி இளங்கோ நகரில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்ட, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் சகோதரி வீடு.படங்கள்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி மக்களவை தொகுதி காங். வேட்பாளர் சகோதரி வீட்டில் வருமான வரி சோதனை

செய்திப்பிரிவு

புதுச்சேரி/திருவண்ணாமலை: புதுச்சேரி மக்களவைத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் சகோதரி வீட்டில் வருமான வரி சோதனைநடைபெற்றது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் காரைக்காலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் எதிரேயுள்ள இளங்கோ நகரில், வைத்திலிங்கத்தின் சகோதரி ஜெயக்குமாரியின் வீடு உள்ளது. இவர் 2 மாதங்களுக்கு முன்உயிரிழந்துவிட்டார். வீட்டில்அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 9 பேர் நேற்று மதியம் முதல் ஜெயக்குமாரி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை சோதனை நீடித்தது. இதையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக வீட்டின் முன் குவிக்கப்பட்டனர். சோதனைக்கு இடையில், பணம் எண்ணும் இயந்திரம் வீட்டுக்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

வைத்திலிங்கத்தின் சகோதரி வீட்டில் இருந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள்.

ஆவணங்கள் பறிமுதல்: சோதனை முடிந்து இரவு 8 மணியளவில், வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை ஒரு சூட்கேஸில் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். எனினும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரங்களும் சென்னையில் உள்ள வருமான வரித் துறை தலைமை அலுவலகம் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அரிசி ஆலைகளில் சோதனை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று முன்தினம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

மாலையில் தொடங்கிய வருமான வரி சோதனை இரவு வரை நீடித்தது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT