கோவை: தோல்வி பயத்தில் இடையூறு செய்ய பாஜக வேட்பாளர் திட்டமிட்டுள்ளதாக கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நேற்று அவர்கள் கூறியதாவது: பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்டித்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலையின் விதிமீறல் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆதாரத்தோடு புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைதியான கோவையில் அதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, மதவெறியை தூண்டிவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர். திமுக தொண்டர்கள் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்.
பாஜகவினர் சிறுவர்களை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். பாஜகவினர் தோல்வி பயத்தில் இடையூறு செய்ய திட்டமிட்டிருப்பார்களோ? அல்லது தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்களோ? என எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினா்.