திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கினால் குழந்தை திருமணங்கள் குறையும் என்று சென்னையில் நடந்த கலந்தாய்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் மீதான பாகுபட்டை தடுக்கும் சர்வதேச ஒப்பந்தமான ‘சிடா’ பற்றிய 2 நாள் கலந்தாய்வு கூட்டம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடந்தது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு 100 ஆய்வு அறிக்கை களை சமர்ப்பித்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 அறிக்கை கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.
அந்த தொகுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து கருத்தரங்கின் ஒருங்கிணைப் பாளரான பேராசிரியை சர்வாணி கூறியதாவது:
திருமணங்களை பதிவு செய் வதை கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணங் களை தடுக்க முடியும். சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிக்கும் பல கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அதைத் தடுக்கவும், வலைதளங்களை உபயோகிப்பவர்களுக்கு பெண்கள் பிரச்சினை குறித்து முறையாக உணர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டு வேலை செய்யும் பெண் களுக்கு அனைத்து மாநிலங்களி லும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்க வேண்டும். 2010-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயற்றப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், நமது சட்டத்தைவிட பல முற்போக்கு அம்சங்களை கொண்டுள்ளது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் தொகுப்பு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு சர்வாணி கூறினார்.
கலந்தாய்வு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த பாண்டியன் பேசும்போது, ‘‘வலுவான சட்டங்கள் மட்டும் அல்லாமல் விழிப்புணர்வும் கல்வியும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க உதவும்’’ என்றார். இசை பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை காயத்ரி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.