தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, விருகம்பாக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர். 
தமிழகம்

நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தென்சென்னை தொகுதியில் திமுகவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன், இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின் போது, திருமாவளவன் பேசியதாவது: அகில இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வியூகம் உள்ளது. அதனால் மட்டுமே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து அகில இந்திய தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்துள்ளார்.

பாஜகவோடு திமுக கூட்டணி வைத்திருந்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்திருக்காது. இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து ஏனோ தானோ என்று பதவிக்காக ஒரு தேர்தலை முதல்வர் சந்திக்கவில்லை.

இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும். அகில இந்திய அளவில் ‘இண்டியா’கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார்.

SCROLL FOR NEXT