சென்னை: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) ஆலோசகர் (கல்வி) மம்தா ஆர்.அகர்வால், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே ஏஐசிடிஇ-யால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி கல்லூரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
இதுதவிர, கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைத்தல், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாணவர்கள் மத்தியில் ராகிங் எதிர்வினைகள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
ராகிங் தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் உதவி எண்களை கல்லூரி வளாகங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.