மதுரை: தமிழகத்தில் முதல்வரின் குரல் மக்களின் ஒட்டுமொத்த குரலாக மாறி இருக்கிறது. இது நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.
மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டங்கள், ஜனநாயக கட்டமைப்புகளை தகர்த்து நாட்டை பாசிச சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சிக் கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், கூட்டாட்சி நெறிமுறைகள், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை காப்பாற்ற இந்தியா கூட்டணி அமைந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வரின் குரல் மக்களின் ஒட்டுமொத்த குரலாக மாறி இருக்கிறது. இது நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பாஜக ஆட்சி வீழ்வது உறுதியாகி விட்டது என்பதை தெரிந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மிரண்டு போயுள்ளனர்.
அதன் விளைவுதான் தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகிறார்கள். இங்கு ரோடு ஷோ வேண்டுமானால் நடத்தலாம். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வீழ்ச்சி உறுதியானதால் விரக்தியின் விளிம்பில் எதிர்க் கட்சிகளை தாக்குவது, அவதூறு கூறுவது என மோடி பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்.
தற்போது புதிதாக மோடி கேரன்ட்டி என்கின்றனர். கடந்த தேர்தலில் அவர் கொடுத்த கேரன்ட்டி என்ன ஆனது? இந்தியா கூட்டணியைப் பார்த்து மற்ற கட்சிகள், குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதற்றமடைந்திருக்கிறார்.
தமிழகத்தின் உரிமைகளை பறித்தபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார். பாஜக அதிகாரத்துக்கு வரக் கூடாது என அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் பகிரங்கமாக பேச வேண்டும்.
பெயர்தான் பாட்டாளி மக்கள் கட்சி. அதானி அம்பானிகளின் கட்சியான பாஜகவோடு சேர்ந்தது பாமக செய்யும் பச்சை துரோகம். ஊடகம், சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் சிந்தனைகளை திசை திருப்ப பார்க்கிறார் மோடி.
கணினியில் உள்ள டேட்டாக் களை திருடி விடலாம். ஆனால் நடைமுறையில் மக்களின் மனப் போக்கை திருடிவிட முடியாது. எனவே தான் தேர்தல் சுதந்திரமாக நேர்மையாக நடை பெறுமா என்ற சந்தேகம் உள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தொகுதிப் பங்கீடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையேதான் போட்டி என்பதால், கேரளாவில் பாஜக காலூன்ற அனுமதிக்கப்பட விலலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.