விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களில் 3 பேர் திங்கள் கிழமை இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் சுபாஷ்சிங் என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலையில் சனிக் கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியாற்றிய கான்சாபுரத்தைச் சேர்ந்த ஆவுடையம்மாள் (50), இவரது சகோதரி ஆண்டாள் (55), பாப்பா (31), தெற்கு ஆனைக்குட்டத்தைச் சேர்ந்த சுப்புலெட்சுமி (51), கூமாபட்டியைச் சேர்ந்த பாண்டி (26), கண்ணன் (42), கணேசன் (52) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர்.
இவர்கள் 8 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதுகுறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர் சுபாஷ்சிங், போர்மேன் சேகர பாண்டியன், மேலாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, மேலாளர் கண்ணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த கண்ணன் (42) சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார். ஆண்டாள் (55), பாப்பா (31), சுப்புலெட்சுமி (51) ஆகியோரும் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். பாண்டி, கணேசன், குருசாமி, ஆவுடையம்மாள் ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.