சேலம்: மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை எங்கும் நடக்கக்கூடாது என்பதற்காக சாக்கடை குழியில் தொழிலாளிகளை இறக்கி வேலை வாங்குபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், சில இடங்களில் சட்டத்தை மீறி சாக்கடை தொட்டிகளில் தொழிலாளர்கள் இறங்கி கழிவுகளை பக்கெட்டுகளில் அள்ளி எடுத்து அடைப்பு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபோல சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை தொட்டியில் தொழிலாளர்கள் இறங்கி அடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்ட அவலம் நடந்துள்ளது.
சேலம் குகை மூங்கப்பாடி தெருவில் பொதுமக்களின் வீடுகளில் இருந்து வரும் கழிவுகளை வெளியேற்ற பாதாள சாக்கடை மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பராமரிப்பு பணி தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வப்போது, பாதாள சாக்கடை குழிகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் சாலையில் வெளியேறுவதும், அடைப்பு காரணமாக குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுவதும் வழக்கம். இவ்வாறு பாதாள சாக்கடை குழிகளில் அடைப்பு ஏற்படும்பட்சத்தில், அதற்கான பிரத்யேக இயந்திரம் மூலம் சாக்கடை அடைப்புகளில் உள்ள கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றப்படும்.
இவ்வாறான வசதிகள் இருந்தும், சேலம் குகை மூங்கப்பாடி தெருவில் நேற்று பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது இயந்திரம் மூலம் அடைப்பை சரி செய்யாமல் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 10 அடி ஆழம் கொண்ட பாதாள சாக்கடை குழியில் மார்பளவு கழிவுக்குள் இறங்கி குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தேங்கிய கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையான சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இக்கழிவு குழிகளில் விஷ வாயுக்கு மத்தியில் அத்தொழிலாளி பணியில் ஈடுபட்டதை பார்த்து, அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இதுபோன்ற கழிவு குழாய்களில் இறங்கும்போது சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் முதல்வர் முதல் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமையில் தொழிலாளி ஈடுபடுத்தப்பட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுவதும், பின்னர் அதனை மீறுவதும் வாடிக்கையாக உள்ளது.
அரசே சட்டம் அமல்படுத்தி விட்டு அரசு சார்ந்த மாநகராட்சி நிர்வாகத்தின் பாதாள சாக்கடை குழியில் தொழிலாளியை இறக்கி பணி செய்தவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கு விடை தெரியாத சூழலே உள்ளது. எனவே, வருங்காலத்தில் பாதாள சாக்கடை குழியில் இறங்கி தொழிலாளர்கள் வேலை பார்க்க விடாமல் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சட்டத்துக்கு புறம்பானது: இதுகுறித்து சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் மோகனிடம் கேட்ட போது, ‘சேலம் மாநகராட்சி பொறியியல் கட்டுப்பாட்டில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி உள்ளது. மாநகராட்சி பொது சுகாதார துறையில் பணியாற்றும் தொழிலாளர்களை இவ்வாறு சாக்கடை குழிகளில் இறங்கி வேலை பார்க்க அனுமதிப்பதில்லை.
தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி நடந்து வரும் நிலையில், அவர்களால் தொழிலாளர்கள் இவ்வாறான பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. யாரையும் எப்போதும் சாக்கடை குழியில் இறக்கி பணி செய்ய விடக்கூடாது என்பதையே அரசு சட்டப்பூர்வமாக வலியுறுத் தியுள்ளது.
இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி தலைமை பொறியாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று, வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.