சென்னை: கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் திமுக எம்.பி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டி மேல்மாம்பட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கோவிந்தராசு என்பவர் கடந்த 2021 செப்டம்பரில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் கொலையான கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை கடலூர் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிட்டது.
நியாயம் கிடைக்காது: இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்வேல் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த வழக்கில் தனக்கு மட்டுமே சாட்சி விசாரணைக்காக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை. இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்துநடந்தால் நியாயம் கிடைக்காது என தெரிவித்திருந்தார்.
சிபிசிஐடியிடம் முறையிடலாம்: இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.
இருப்பினும், அரசு வழக்கறிஞர் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவரை மாற்றக் கோரிசிபிசிஐடி போலீஸாரிடம் முறையிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.