திருவண்ணாமலை: முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டுள்ள கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியால், மத்தியில்எப்படி ஆட்சி நடத்த முடியும் என்றுஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து, ஆரணியில் நேற்றுமாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு பச்சை பொய் பேசுகிறார் பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். விவசாயம், விவசாயிகள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ரத்தத்தை வியர்வையாக சிந்தி, உணவு அளிப்பவர்கள்தான் விவசாயிகள். நானும் ஒரு விவசாயிஎன்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விவசாயிகள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அமலாக்கத் துறை, வருமான வரித் துறைக்குபயப்படாதவர்கள். என்னை கொச்சைப்படுத்திப் பேசுவதாக கருதிக்கொண்டு, விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. ரூ.9,300 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுத்தோம். 100 டன் உற்பத்தியை எட்டி, தேசிய அளவில் விருது பெற்றோம். உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெறப்பட்டன. இதுபோன்று ஒரு விருதையாவது திமுக அரசு பெற்றுள்ளதா?
திமுக ஆட்சியில் திட்டங்களைச் செயல்படுத்த 52 குழுக்களை அமைத்துள்ளனர். இது திராவிட மாடல் அரசு இல்லை, குழு மாடல் அரசு. அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. வாரிசு அரசியல் செய்யும் திமுக, கார்ப்பரேட் கம்பெனியைப் போன்றது. கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? வேதனையைத்தான் மக்களுக்குப் பரிசாக ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும் என துடிக்கிறார்.
மொத்தம் 26 கட்சிகள் இணைந்து அமைத்த இண்டியா கூட்டணியின் 2-வது கூட்டத்துக்குப் பிறகு நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பிரிந்துவிட்டனர். தேர்தலில் ஒற்றுமை இல்லாதவர்களால், பிரதமரை எப்படி ஒற்றுமையாகத் தேர்ந்தெடுக்க முடியும். டெல்லியில் காங்கிரஸை ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கிறது. கேரள மாநிலத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் மனைவி போட்டியிடுகிறார். இப்படி முரண்பட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியால், மத்தியில் எப்படி ஆட்சி நடத்த முடியும். எனவே, மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது.
மக்களை வதைக்கும் பாஜக அரசு: வெளிநாட்டில் இருந்து குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, அதிக விலைக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது. டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பாஜக அரசும், திமுக அரசும் மக்களை வாட்டி வதைக்கின்றன. எனவே, அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.