கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 19 ஆயிரம் போலீஸார்: 3 இடங்களில் தபால் வாக்குகளை செலுத்தினர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் 19 ஆயிரம் போலீஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தெரிவு செய்யப்பட்ட 3 இடங்களில் நேற்று முதல் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 538 போலீஸார், இதர மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 533 போலீஸார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 51 போலீஸார் என மொத்தம் 19,122 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தபால் வாக்குகளை செலுத்துவதற்கான படிவங்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட சென்னையில் மூலகொத்தளம், மத்திய சென்னையில் செனாய் நகர், தென் சென்னையில் அடையார் ஆகிய 3இடங்களில் இயங்கும் மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் போலீஸார் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தபால் வாக்கு செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தகுதியான போலீஸார் தகுந்தஆவணங்கள் மற்றும் காவலர்அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று நேற்று வாக்களித்தனர். வரும்13-ம் தேதி மாலை 5 மணி வரைசெலுத்தலாம். தென் சென்னையில் நடைபெற்ற போலீஸாரின் தபால் வாக்குப்பதிவை மாவட்டதேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மத்திய சென்னை, தென் சென்னை வட்டார அலுவலகங்களில் நடைபெற்ற தபால் வாக்களிப்பு பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT