சிவகங்கை: தோல்வி பயத்தால் கார்த்தி சிதம்பரம் எனக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறார், என சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை அருகே ஒக்கூர், மதகுபட்டி, கீழப்பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் தேவநாதன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இதுவரை நடந்த தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் ப.சிதம்பரம் குடும்பத்துக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கி வந்துள்ளன. இந்த முறை பாஜக மிகப்பெரிய கூட்டணி அமைத்து, ப.சிதம்பரம் குடும்பத்தை எதிர்த்து நிற்கிறோம். மக்கள் எதிர்ப்பால் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்துக்கு செல்லவே அச்சப்படுகிறார்.
தோல்வி பயத்தால் எனக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக உள்ளோம். சிவகங்கை தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால், இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு, வெளியூர்களுக்கு செல்கின்றனர். இதற்கு ப.சிதம்பரம் தான் காரணம். பாஜக வென்றால் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.