ராஜபாளையம் அருகே அருள்புதூர் ஊராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளரிடம் அடிப்படை வசதி இல்லை என புகார் தெரிவித்தவரை சமாதானப்படுத்திய போலீஸார். 
தமிழகம்

‘அடிப்படை வசதிகள் இல்லை’ - தென்காசி திமுக வேட்பாளரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அருள்புதூர் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி மற்றும் எம்எல்ஏ தங்கப் பாண்டியனிடம், தங்களது பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேவதானம், சேத்தூர், தளவாய்புரம், புனல்வேலி, புத்தூர், அருள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி, தங்கப் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். புனல்வேலி கிராமத்தில் பிரச்சாரம் செய்த போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாலை வசதி இல்லை என புகார் தெரிவித்தார். அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அருள்புதூர் ஊராட்சியில் பிரச்சாரம் செய்த போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. ஓட்டு கேட்க மட்டுமே வருகிறீர்கள். இப்போது கூட எம்.பி. வரவில்லை என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இதையடுத்து வேட்பாளர் ராணி மற்றும் தங்கப் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் பிரச்சாரத்தை விரைவாக முடித்துக் கொண்டு திரும்பினர்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதிகளில் தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அப்போது பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலை மோசமாக உள்ளது, அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனக் கூறி பிரச்சார வாகனத்தை சூழ்ந்து பொது மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி கவுன்சிலர் அர்ச்சனா மற்றும் நிர்வாகிகள் பொது மக்களை சமாதானம் செய்தனர்.

SCROLL FOR NEXT