ஓ.பன்னீர்செல்வம் 
தமிழகம்

‘பிரதமர் மோடி குறித்து தவறான பதிவு’ - நவாஸ்கனி, திமுகவினர் மீது ஓபிஎஸ் தரப்பினர் புகார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி வரும் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ்ஸின் தேர்தல் தலைமை முகவர் சந்திர சேகரன், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் திமுகவினர் தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அச்செய்தியை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞரும், தேர்தல் தலைமை முகவருமான பி.சந்திர சேகரன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அலுவலர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோருக்கு, இ-மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பா.விஷ்ணு சந்திரன், தேர்தல் பார்வையாளர் ( பொது ) பண்டாரி யாதவ் ஆகியோரிடம் நேரடியாக புகார் அளிக்க வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் தொலைபேசி மூலம் புகாரை தெரிவித்தனர்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது, ராமர் கோயில் நிகழ்ச்சிக்கான அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்துகிறது என பேசியதை, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்டது போல், ‘ஸ்ரீராம பெருமான் பாவ விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது’.

அந்த பாவ பூமியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்பதாலேயே ராமநாதபுரத்தில் போட்டியிடவில்லை, உத்தரபிரதேச கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு என்ற போலியான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மற்றும் வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மக்களிடையே செல்வாக்கை குறைக்கும். எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞரும், தேர்தல் தலைமை முகவருமான சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் செய்தியை தடுத்து நிறுத்த வேண்டும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம், எனக் கூறினார்.

SCROLL FOR NEXT