சேலம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் மெய்யனூரில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்கக்கோரி பிரச்சாரம் செய்தார். படம்: எஸ்.குரு பிரசாத 
தமிழகம்

“கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி... வாக்குறுதி மன்னர்கள்!” - அன்புமணி விமர்சனம்

செய்திப்பிரிவு

சேலம்: திமுக என்றாலே வாக்குறுதி மன்னர்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து, உதயநிதியும் வாக்குறுதி அளிப்பதோடு சரி, அதை நிறைவேற்றுவதில்லை, என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் என்.அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் மெய்யனூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: திமுகவை தொடங்கியவர் அண்ணாதுரை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அண்ணா துரையை திமுகவும், அதிமுகவும் மறந்துவிட்டன. அவரது கொள்கைகளையும் முற்றிலும் மறந்துவிட்டன. தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி, சேலம் மாவட்டத்துக்கு பல திட்டங்களை செய்திருக்க முடியும்.

அவர் சேலத்துக்கு 2 பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார். ஆனால், இது தவறான திட்டம். அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலால் இந்த பாலம் இடிக்கப்பட வேண்டியதாகும். சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். பிரதமரை சந்தித்து, இந்த உருக்காலையை இயங்க வைப்போம். இங்கு காலியாக உள்ள நிலத்தை, அதனை வழங்கிய விவசாயிகளுக்கே மீண்டும் கொடுக்க முயற்சிப்போம். அல்லது வேறு திட்டத்தை இங்கு செயல்படுத்துவோம்.

அதிமுகவினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உங்கள் கட்சி தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களுக்கு பிரதமர் வேட்பாளரும் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பழனிசாமி முதல்வராக ஆகப்போவதில்லை. உங்களுக்கு எதிரி திமுக தான். அந்த எதிரியை வீழ்த்தவும், பழிவாங்கவும் நீங்கள் பாமகவுக்கு வாக்களித்து, வெற்றி பெறச்செய்யுங்கள். திமுக என்றாலே வாக்குறுதி மன்னர்கள்.

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து, உதயநிதியும் வாக்குறுதி அளிப்பதோடு சரி, அதை நிறைவேற்றுவதில்லை. சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் யாராவது பாஜகவில் இருக்கிறார்களா. ஆனால், ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில், சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தான் கூறியிருக்கிறார். திமுக, அதிமுக ஆகியவற்றின் மீது மக்களே உங்களுக்கு கோபம் இருக்கிறது. இந்த தேர்தலில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள், என்றார்.

SCROLL FOR NEXT