கோவில்பட்டி: கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றுச் சாலை கேட்டு கருப்பு கொடியேற்றி மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
கயத்தாறு வட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கராப்பேரி என்ற கோடங்கால் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோடங்கால் கிராமத்துக்கு வரும் வழியில் உள்ள இருப்புப் பாதைக்கு கீழ் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டது. அப்போதே இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்மாய் அருகே ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கும்.
மேலும், கண்மாய் தண்ணீர் அதிகமாக இருக்கும் போது, நீரூற்று ஏற்பட்டு சுரங்கப் பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் சுரங்கப் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கோடங்கால் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யப்படவில்லை. இந்த தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரை அருந்திய கிராம மக்கள் நோய் வாய் பட்டு பாதிப்படைந்துள்ளனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, ரயில்வே சுரங்கப்பாதைக்கு பதிலாக நிரந்தரமாக மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, கிராமம் முழுவதும் கருப்பு கொடிகளை ஏற்றினர்.
இது குறித்து கோடங்கால் கிராம மக்கள் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர், அதன் பின்னர் யாரும் வருவதில்லை. மழைக் காலங்களில் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி எங்களது கிராமம் ஒரு தீவு போல மாறி விடுகிறது. குழந்தைகள் பள்ளிகளுக்கும் கர்ப்பிணிகள், முதியவர்கள் சிகிச்சைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பல விதமான நோய்களுக்கு உள்ளாகி இருக்கிறோம்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடாங்கால் கிராமத்தில் இருந்து கடம்பூர் செல்வதற்கு குளத்துக்கரை வழியாக இருப்புப் பாதையோரம் சாலை அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். ஆனால் அந்த பணிகள் தொடங்கவில்லை. எனவே இந்த முறை கிராமம் முழுவதும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்,” என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிய ராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜா மற்றும் அதிகாரிகள் கோடாங்கால் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தேர்தலை புறக்கணிப் பதில் உறுதியாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.