தமிழகம்

தமிழிசை Vs தமிழச்சி தங்கபாண்டியன் - மோடி ‘ரோடு ஷோ’வில் மக்கள் தடுத்து நிறுத்தமா?

செய்திப்பிரிவு

சென்னை: "தென் சென்னை மக்களுக்கு பாஜகவை பற்றி நன்றாக தெரியும். வெள்ளத்தின்போது மக்கள் உடன் பாஜக நிற்கவில்லை. அதனால் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்கள் செல்லவில்லை. தமிழக அரசு இந்த மாதிரியான விஷயங்களில் தலையிடுவதில்லை" என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்களை வரவிடாமல் தமிழக அரசு தடுத்ததாக தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், "இது மக்களாட்சி. ஒரு காலமும் அப்படி நடக்காது. பாஜகவை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக தென் சென்னை மக்களுக்கு பாஜகவை பற்றி நன்றாக தெரியும். வெள்ளத்தின்போது மக்கள் உடன் பாஜக நிற்கவில்லை. அதனால் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்கள் செல்லவில்லை. தமிழக அரசு இந்த மாதிரியான விஷயங்களில் தலையிடுவதில்லை.

பிரதமர் மோடி வந்து சென்றதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எந்த மாற்றமும் நிகழாது. அவர் ரோடு ஷோ பண்ணலாம். ஆனால், ரியல் ஆக்‌ஷன் ஹீரோ எங்கள் முதல்வர் ஸ்டாலின். அதேபோல், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தினமும் எதாவது ஒரு கற்பனை கதையை பேசிவருகிறார். சென்னை வெள்ளத்தின்போது தென் சென்னை மக்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்று நேற்று பேசியுள்ளார்.

உண்மை என்னவென்றால், சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டனர். அதேபோல் ஜேசிபியில் போய் பொது மக்களுக்கு தண்ணீர், பால் பாக்கெட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்பதால், இப்படி கதை கட்டுவதை ஜெயவர்தன் வழக்கமாக கொண்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

தமிழிசை சொன்னது என்ன? - முன்னதாக, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "தி.நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு வருகை தந்த மக்களை காவல் துறை வேண்டும் என்றே தடுத்து நிறுத்தியது. பல கிலோ மீட்டர் முன்பே தடுப்புகள் அமைத்து தடுத்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்துதான் மக்கள், பிரதமரின் ரோடு ஷோவுக்கு வந்தனர்" என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டியிருந்து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT