தமிழகம்

ராமநவமியை முன்னிட்டு 10 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு: கன்னியாகுமரிக்கு மட்டும் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: ராமநவமியை முன்னிட்டு 10 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராமநவமியை முன்னிட்டு நாளை (ஏப்.12) முதல் ஏப்.17 வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரையாத்திரை மேற்கொள்ள அனுமதிகோரி கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஆஞ்சநேயம் அறக்கட்டளை யின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ``தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் வழியாகக் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் யாத்திரையை நிறைவு செய்ய அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ``ராமநவமி யாத்திரைக்கு நாங்கள் எதிராகச் செயல்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு காரணமாகவே இந்த முறை அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த முறை ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை 11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது'' என்றார்.

அதையடுத்து நீதிபதி, ``தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அனுமதி கோரியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் யாத்திரை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரையை நடத்திக் கொள்ளலாம்'' என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ``கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி மனுதாரர் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை போலீஸார் 2 நாட்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT