தமிழகம்

கமல்ஹாசன் குறித்த விமர்சனம்: அண்ணாமலைக்கு மநீம கட்சி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குறித்து விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது, மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து ஆர்எஸ்எஸ் அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று கூறினார்.

இது தொடர்பான செய்தியாளர் களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாறிவிடும் என்று கமல்ஹாசன் எந்த அடிப்படையில் சொல்கிறார் எனப் பார்க்க வேண்டும். அவர் உட்பட யார் சொன்னாலும் அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

காந்தியின் பேரனாக பல கோடி இதயங்களில் வாழ்பவர் கமல்ஹாசன். அவர் அண்ணா மலையை மன்னித்தாலும், 8 கோடி தமிழர்களும், 140 கோடி இந்தியர்களும், வாக்காளர்களும் நீங்கள் பேசிய பண்பாடற்ற வார்த்தைகளுக்காக அவரை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT