சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு உட்பட்ட சொனப்பாடி கிராமத்தில் சாலை வசதி செய்து கொடுக்காததால், அதிருப்தியில் இருந்த மக்கள், வாக்கு சேகரிக்க வந்த திமுக-வினரை மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சொனப்பாடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, திமுக ஆளும்கட்சியாக உள்ள நிலையில், கிராம மக்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களிடமும், அரசுத் துறை அதிகாரிகளிடமும் சாலை வசதி கேட்டு முறையிட்டனர். ஆனால், யாரும் கண்டு கொள்ளாததால், சாலை வசதியின்றி கிராம மக்கள் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
சொனப்பாடி கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்காததால், கடந்த வாரம் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு சொனப்பாடி கிராமத்துக்குச் சென்றனர். அப்போது , திமுக-வினர் வந்த தேர்தல் பிரச்சார வாகனம் ஊருக்குள் வரக்கூடாது என்று மறித்தனர். ஊர் எல்லையில் வாகனத்தின் முன்பு மூதாட்டி ஒருவர் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக-வினர் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரக் கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர். வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக-வினர் கிராம மக்களை சமாதானப்படுத்த முயன்றும், முடியாத நிலை ஏற்பட்டது. கடும் அதிருப்தியில் இருந்த சொனப்பாடி கிராம மக்களின் எதிர்ப்பால், திமுகவினர் வாக்கு சேகரிக்க ஊருக்குள் செல்ல முடியாமல் திரும்பினர். வரும் மக்களவைத் தேர்தலில் ஊர் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து, அறிவித்துள்ளனர். சொனப்பாடி கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்காததால், கடந்த வாரம் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.