தருமபுரி மாவட்டம் அரூரில் நடந்த வாகன பிரச்சாரத்தில் பாமக வேட்பாளர் சவுமியாவுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். 
தமிழகம்

“போதைப்பொருளை தடுக்காமல் கிளி ஜோதிடரை கைது செய்கிறது திமுக அரசு” - அன்புமணி ஆவேசம்

செய்திப்பிரிவு

அரூர்: திமுக அரசு, தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்காமல் கிளி ஜோதிடரை கைது செய்து கொண்டிருக்கிறது என தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு ஆதரவு கேட்டு தருமபுரி மாவட்டம் மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் நேற்று அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் பலர் சொந்த நிலமிருந்தும் நீர் வளம் இல்லாததால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் கூலி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும். 80 ஆண்டுகால கோரிக்கையான தருமபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்தேன். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது சிறு தானியங்கள், பாலக்கோடு பகுதியில் இருந்து தக்காளி சாஸ் போன்றவற்றை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப முடியும். இதன்மூலம் மாவட்டம் வளர்ச்சி பெறும்.

தருமபுரி சிப்காட் வளாகத்தில் 1,500 ஏக்கரில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலை வாய்ப்புக்கு வழி செய்யப்படும். மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். காவிரி உபரி நீர் திட்டமும் நிறைவேற்றப்படும். திராவிட கட்சிகளின் 57 ஆண்டு கால ஆட்சியில் இளையோர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அமெரிக்காவில் விற்பனையாகும் போதைப்பொருட்கள் தமிழகத்தில் விற்பனை யாகிறது. இந்நிலை தொடர்ந்தால் தமிழகம் நாசமாகி விடும்.

2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும். திமுக அரசு, தமிழகத்தில் போதைப் பொருட்களை தடை செய்யாமல் கிளி ஜோதிடரையும், விவசாயிகளையும் கைது செய்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின், பழனிசாமி ஆகியோருக்கு தொலை நோக்கு பார்வை, சிந்தனை இல்லை. எனவே, ரூ.500, ரூ.1,000-க்கு விலை போகாதீர்கள். இவ்வாறு பேசினார்.

SCROLL FOR NEXT