தமிழகம்

மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்றாத ஊழியர்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்றாத ஓட்டுநர், நடத்துநர் மீது மாநகர போக்குவரத்துக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிக்கு (தடம் எண் 101) மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்குமுன், கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பேருந்து நிற்காமலும், அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளியை ஏற்றாமலும் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுத் திறனாளியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பேருந்தை விரட்டிச் சென்று வழிமறித்தார். இது தொடர்பாக அவர் ஓட்டுநர், நடத்துநரிடம் கேள்வி எழுப்பியபோது, சமூக ஆர்வலரை நடத்துநர் தரக்குறைவாகப் பேசினார்.

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் சமூக ஆர்வலர் பதிவிட்டார். இது வேகமாகப் பரவிய நிலையில், புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT