தமிழகம்

தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரிய பாஜக எம்.பி-க்கு வைகோ பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்த, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின் அஞ்சல் கடிதம் அனுப்பி உள்ளார்.

வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, குடியரசுத் தலைவரிடம் தாங்கள் கோரிக்கை விடுத்ததற்கு, இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். கடந்த ஜூலை 31 ஆம் நாள், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உரை ஆற்றும்போது, திருவள்ளுவர் பிறந்த நாளை புகழ்மிக்க இந்திய மொழிகள் தினமாக, நாடு முழுமையும் கொண்டாட வேண்டும் என்று தாங்கள் குறிப்பிட்டது, தமிழர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

2015 இல், திருவள்ளுவர் பிறந்த நாளை, வட இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாக நீங்கள் அறிவித்து இருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும்.

நோபல் விருது பெற்ற உலகின் புகழ்மிக்க சிந்தனையாளர் ஆல்பர்ட் Þவைட்சர் தனது, ‘இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும் (Indian thought and its development)’ என்ற நூலில், ‘திருக்குறளைப் போன்ற இத்துணை உயர்ந்த நல்லறிவு செறிந்த மணிமொழித் தொகுதி உலகத்தில் உள்ள இலக்கியங்களில் எதனினும் கிடையாது’ என்று புகழ்ந்து உரைத்தார்.

தமிழ் மக்கள் சார்பாகவும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், தங்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT