சென்னை: தென்சென்னை, மத்திய சென்னை வடசென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் 2 கி.மீ. தூரம் ‘ரோடு ஷோ’ நடத்தி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்துக்கு தொடர்ந்து 5 முறை வந்த பிரதமர் மோடி, பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், 6-வது முறையாக தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, ‘ரோடு ஷோ’வில் (வாகனப் பேரணி) பங்கேற்பதற்காக கார் மூலம் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை வழியாக தியாகராய நகரில் உள்ள பனகல் பார்க் பகுதிக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த பிரதமர் மோடி, 6.30 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி ‘ரோடு ஷோ’வை தொடங்கினார்.
வாகனத்தில் பிரதமருடன் தமிழக பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை தொகுதி வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் இருந்தனர். பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரைபாண்டி பஜார் பகுதியில் சுமார் 2 கி.மீ.தூரத்துக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ சென்றார்.
பிரதமரை வரவேற்கும் விதமாகசாலையின் இருபுறமும் ஏராளமானபாஜக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்துகைகூப்பி வணக்கம் தெரிவித்து, கையசைத்து, தாமரை சின்னத்தை காண்பித்தவாறே பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
தமிழ் பாரம்பரியத்தில் பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடி மீது மலர் தூவியும், ‘மோடி மோடி, பாரத் மாதா கீ ஜே’ என முழக்கமிட்டும் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பெண் தெய்வங்கள்போல வேடமிட்ட பெண்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், நாகஸ்வர கச்சேரி, செண்டை மேளம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. ‘என் குடும்பம் மோடி குடும்பம்’ என்ற பதாகைகளுடன் பங்கேற்ற தொண்டர்கள், ‘வேண்டும்மோடி மீண்டும் மோடி’ என்று கோஷமிட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோடியின் புகைப்படம் கொண்ட முகமூடி அணிந்து வந்திருந்தனர்.
‘ரோடு ஷோ’ முடிந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் பாஜக வேட்பாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காரில் ஏறி புறப்பட தயாரான பிரதமர் மோடி, அண்ணாமலையை அருகில் அழைத்து சிறிது நேரம் தனியாக பேசினார். பின்னர், கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.
3,500 போலீஸார் பாதுகாப்பு: பிரதமரின் ‘ரோடு ஷோ’ நடைபெற்ற பாண்டி பஜார் பகுதியில் சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களின் மாடிகளில் இருந்தும், தற்காலிகமாக அமைப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீஸார் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். தி.நகர் பகுதி முழுவதும் ட்ரோன்களை பறக்கவிட்டும் கண்காணித்தனர்.
பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வை பார்க்க வந்த மக்கள், பாஜக தொண்டர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.